கடவுள்கூறு தெய்வமாக, தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம்

கடவுள்கூறு தெய்வமாக, தமிழ்முன்னோர் கொண்டாடி இருந்த தமிழைப், போற்றுவதற்கானதே! திருக்குறளின் முதலாவது அதிகாரம், என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

தமிழ்முன்னோர், கடவுள் என்றும், இறை என்றும் நிறுவியது, ஐந்திரம் என்கிற ஐந்து ஆற்றல் மூலங்களை மட்டுமே. 

அந்த ஐந்திர ஆற்றல்கள் 1.விசும்பு 2.நிலம் 3.நீர் 4.தீ 5.காற்று என்பன ஆகும்.  

கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள். 

அவற்றில் விசும்பையே கடவுள் என்றும்- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளையே இறை என்றும் நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர்.

கடவுள் குறித்த விரிவான விளக்கத்தை, 'கடவுள்! தமிழ்ச்சொல் மட்டுமே' என்கிற கட்டுரையில் புரிந்து கொள்ளலாம்.

இந்த ஆற்றல் மூலங்கள் தொய்ந்தவைகளைத், தெய்வங்கள் என்று நிறுவினர் தமிழ்முன்னோர். 

தெய்வங்கள் வழிபாட்டு மூலங்கள்.

அந்தத் தெய்வங்கள் மூன்று வகைப்படும். 1.கடவுள்கூறு தெய்வம் 2.இறைக்கூறு தெய்வம் 3.குலதெய்வம் என்பன.

நம்மால் உருவாக்கப்பட்ட அனைத்தையும் கடவுள்கூறு தெய்வங்கள் என்றும், 

நம் உருவாக்கத்தில் பங்கு வகிக்கிற அனைத்தையும் இறைக்கூறு தெய்வங்கள் என்றும், 

நம் முன்னோர் அனைவரும் குலதெய்வங்கள் என்றும் தமிழ்முன்னோர் நிறுவியிருந்தனர்.

நம்மால் உருவாக்கப்பட்ட கடவுள்கூறு தெய்வங்களில், முதலாவது தமிழ் ஆகும். 

இரண்டாவது கடவுள்கூறு தெய்வம் குறிஞ்சித்திணைக்கு உரிய சேயோன் ஆகும். 

மூன்றாவது கடவுள்கூறு தெய்வம் நம்முடைய பிள்ளைகள் ஆகும். 

நான்காவது கடவுள்கூறு தெய்வம் நம்மால் உருவாக்கப்பட்ட அனைத்து கருவிகளும் ஆகும். 

திருக்குறளின் கடவுள் வாழ்த்துக்கு உரிய கடவுள்கூறு தெய்வம் முதலாவது கடவுள்கூறு தெய்வமாக தமிழ்முன்னோர் நிறுவிய தமிழே ஆகும்.

இறைக்கூறு தெய்வம் மற்றும் குலதெய்வங்கள் குறித்த விளக்கத்தை, 'நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு' என்கிற கட்டுரையில் அறியலாம்.

கடவுள், இறை என்கிற ஆற்றல் மூலத்திற்கு மட்டுமே உரிய சொற்களைத்- தெய்வத்தில் இணைத்து குழப்பிக் கொள்கிற பாடு, நாம், பிராமணியச் சார்பில் உலாவருவதால், நமக்குக் கிடைத்து ஆகும். 

திருக்குறள் கொண்டாடும் கடவுளைத், தமிழ் என்று புரிந்து கொள்ளாமல், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்து குறளுக்கும் இடுகுறியாக, பிழையாக, பொருள் சொல்லி வருகிறோம். பல ஆயிரம் ஆண்டுகளாக.

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு 

இது திருவள்ளுவரின் முதல் குறள்.

அகர முதல எழுத்தெல்லாம்:

ஒவ்வொரு மாணவனும், கல்வி கற்க பள்ளியில் காலடி பதித்ததும், அவன் முதலாவதாக  கற்றுத்தெளிய வேண்டிய தமிழில் உள்ள எழுத்துக்களில், முதலாவதாக கற்றுக்கொள்கிற எழுத்து 'அ' என்கிற எழுத்தே.

ஆதிபகவன் முதற்றே உலகு:

உல் என்றால் வட்டம். அதனால் தமிழ்முன்னோர் நமது புவியை மட்டுமல்லாமல்- வட்டமான கோள்களை எல்லாம் உலகம் என்றே குறிப்பிட்டனர். அந்த வகையாக ஏழுகோள்களை, தமிழர் ஏழுலகம் என்று சொல்ல, ஏழுலகத்திற்கு பிராமணர் வேறு பொருள் கற்பிக்கப் போய், இன்றைக்கு ஏழு உலகம் வேறாகவும் ஏழு கோள்கள் வேறாகவும் பார்க்கப்படுகிறது.

பகவன் என்றால் ஞாயிறு. ஆதி பகவன் என்றால் கோள்களில் முதலாவதான ஞாயிறு என்று பொருள்.

எழுத்துக்களுக்கு அகரம் முதல்.

கோள்களுக்கு ஞாயிறு (ஆதிபகவன்) முதல். இந்தக் குறளில் திருவள்ளுவர் போற்ற வந்தது அகரத்தை. 

பள்ளிக்கு வருகிற மாணவன் தமிழின் ஒற்றை எழுத்தையும் கட்டாயம் அறியமாட்டான். ஆனால் ஞாயிற்றையும், ஞாயிற்றின் முதன்மையையும் தாய்மடிப் பல்கலைக்கழகத்திலேயே அறிவான் அல்லவா! 

அதனால், ஞாயின்றின் முதன்மையை உவமையாக்கி, அகரத்தின் முதன்மையைத், திருக்குறள் கற்க, பள்ளிக்கு வந்த மாணவனுக்கு, விளக்குகிறார் திருவள்ளுவர். 

ஆனால் திருவள்ளுவர் போற்ற வந்தது, ஏதோவொரு தெய்வத்தை என்று தெரிவித்து, பல ஆயிரம் ஆண்டுகளாக பொருள் சொல்லிக் கொண்டு வருகின்றனர் வெறுமனே கருத்துப் பரிமாற்றக் கருவியாகத் தமிழைப் படித்தவர்கள்.

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

கல்வி என்ற அதிகாரத்தில் எண்ணும் எழுத்துமான மொழியை மக்களின் கண்கள் என்கிறார் திருவள்ளுவர்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு

என்கிற குறள் மூலமாக.

இப்படிப்பட்ட கண்போன்ற போன்ற மொழியை, அறிவை (வாலறிவன்) அதன் அடிப்படைகளை (நற்றாள்) கொண்டாடா விட்டால் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்னவாக இருக்க முடியும்? என்கிறார் திருவள்ளுவர்.

ஆகவே கல்விக்கு அடிப்படையான அகரத்தை முதலாகக் கொண்ட மொழியை- தமிழை- அதன் அடிப்படைகளைத் தொழுது கொண்டாடுவோம் என்கிறார் மொழி வாழ்த்து அதிகாரத்தின் இரண்டாவது குறளில் திருவள்ளுவர்.

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

மலர் என்பது மனமாகிய புத்தகமே. உங்கள் மனதில் நீங்கள் நிறைத்த தமிழின் அடிப்படையைப் பின்தொடர்ந்தால் நிலத்தில் நெடுங்காலம் வாழ்வீர்கள் என்பது இந்தக் குறளுக்குப் பொருள். மனதில் ஏகுவதாகத் தமிழையன்றி வேறு எதைப் பொருத்த முடியும்!

குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 

தமிழை அன்றி வேறு எந்தவொன்றுக்கு வேண்டுதல் வேண்டாமை இருக்க முடியும்! 

வந்தாரையெல்லாம் எந்த இடும்பையும் இல்லாது வாழ வைப்பது தமிழும், தமிழ்நாடும் அல்லவா!

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

வினைகள் இரண்டு. ஒன்று தன்வினை, இரண்டு பிறவினை. தமிழைப் பொருள் புரிந்து கையாளுகிறவர்களுக்கு அறியாமையினால் விளைந்து விடுகிற இந்த இரண்டு வினைகளும் பாதிக்க முடியாது என்பதே இந்தக் குறளுக்கான பொருள்.

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பது கணியன் பூங்குன்றனாரின் தெளிவூட்டம். பிறாரால் வருவதாக கருதுகிற எந்தத் துன்பமும் நீங்கள் அவர்களுக்கு ஒப்புக்கொடுத்ததால் விளைந்ததே. அந்தத் துன்பத்தில் இருந்து நீங்க அவரிடம் இருந்து விலகுங்கள் என்று தெளிவு படுத்துகிறது இந்தக் குறள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 

இந்தக் குறளில் இறைவன் என்று சுட்டப்படுவது தமிழே.

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.   

ஐம்புலன்களின் ஆசை அடக்கு என்று, உலகமே தவறான கருத்தை முன்னெடுத்து வரும் நிலையில்- மெய், வாய், மூக்கு, கண், காது என்கிற ஐந்துப் புலன்களும் அறிவறி புலன்கள் என்கிற செய்தியை சமைத்துக் கொடுத்து பொய் அகற்றிய உலகின் ஒப்பற்ற மொழியான தமிழின் நெறியில் நின்றால் நீடு வாழமுடியும் என்பது இந்தக் குறளுக்கான பொருள். 

குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு உவமை சொல்ல இயற்கையில் ஒரு பொருளும் இல்லை என்கிற பாட்டிற்குரிய தமிழின் வழி நிற்கா விட்டால் உங்கள் மனக்கவலையை மாற்றுவது அரிது என்கிறது இந்தக் குறள்.

குறள் 8: 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

தமிழாகிய அறக்கடலின் துணையில்லாமல் மற்ற மற்ற கடல்களை நீந்திக் கடக்க முடியாது என்று பேசுகிறது இநதக் குறள்.

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

குணம் என்கிற தலைப்பு மாண்பை மட்டுமே குறிப்பது. நல்ல குணம் கெட்ட குணம் என்பதாக, அது குற்றத்தையும் சார்ந்திருப்பது அல்ல என்பதை, 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல். 

என்கிற குறளால் பொருள் புரிந்து கொள்ள முடியும். ஆகவே திருவள்ளுவர் காலத்தில் குணம் என்பது மாண்பு மட்டுமே என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

கோளில் என்பது நீங்கள் வாழும் மண்ணால், 

பொறியின் என்பது உங்களின் ஆறாறிவுக்கான புலன்களால் பெற்ற அறிவால் ஆகிய மாண்பு எதையும் பெறமுடியாமல் போகும். 

எப்போது?

எண்குணத்தான் ஆகிய தமிழின் தாளை வணங்காத் தலை.

தமிழ் என்பது எழுத்தை மட்டும் குறிப்பது அல்ல. தமிழ் எண்ணையும் குறிப்பது என்பதை, 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 

என்கிற குறளால் தெளிய முடியும்.

எண்குணம் என்பது அடிப்படை எண்களான ஒன்பது எண்களின் 1.உழைப்பு 2.மேலாண்மை 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.போரியல் என்கிற ஒன்பது இயல்புகளைக் குறிக்கும்.

இயற்கையில் அனைத்தும் தனிஒன்றுகளின் கூட்டியக்கமே. இயற்கையின் ஒவ்வொன்றிலும் அமைந்த எண்ணிக்கை மாற்றமே, ஒவ்வொன்றும் வேறுவேறாக இருப்பதற்கான அடிப்படை. என்பது தமிழ்முன்னோர் நிறுவிய நான்காவது முன்னேற்றக்கலை கணியத்தின் அடிப்படை ஆகும்.

கணியன் பூங்குன்றனாரில் இருக்கிற அடைமொழியான கணியனுக்குப் பொருள், கணியத்தைக் கற்று தேர்ந்தவர் என்பது ஆகும்.

இந்தக் கணியம் நியுமராலஜி என்கிற ஆங்கில எண்ணியலுக்கு மூலம் ஆகும்.

ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) பேணும் தனிமப்பட்டியலும் எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பதை ஒப்புக்கொள்ளும் துறையாகும். 

உங்கள் தமிழ் கொண்டுள்ள, நான்காவது முன்னேற்றக்கலை கணியம் தெரிவிக்கும் அடிப்படை எண்கள் ஒன்பதின் இயல்புகளையும் அடிப்படையாகக் கொண்ட தமிழின் அடியை வணங்காவிட்டால் அந்த இயல்புகளின் குணம் என்கிற மாண்புப் பயன்கள் உங்களுக்குக் கிட்டாது என்பதே இந்தக் குறளின் பொருள்.

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

இந்தப் பிறவியில் நீங்கள் சிறப்பாக வாழ்வதற்கு, கட்டாயம் உங்கள் முதல்உடைமையான தமிழைக் கொண்டாடி இருக்க வேண்டும் என்கிறது இந்தக் குறள்.

திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும். அகர, எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பவை அனைத்தும் தமிழைக் கடவுள்கூறு தெய்வமாக முன்னெடுக்கும் வகையிலான சொற்களே.

இந்தக் கட்டுரையை மௌவல் தளத்திலும் படிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன

தமிழ்நாட்டின் கல்விப்பாட்டு முயற்சிக்கு ஒரு கேட்பு மந்திரம்.