குடும்பம் தமிழர்களுக்குச் சொந்தமானது. கூட்டுக் குடும்பம் அல்ல


குடும்பம் தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆனால், கூட்டுக் குடும்பமும், கூட்டு குடும்ப வாழ்க்கையைத் தமிழர்கள் தொலைத்து விட்டனர் என்றெல்லாம் புலம்புகிற கதைக்களங்களும் தமிழர்களுக்கானவை அல்ல. 

இந்தக் கட்டுரையை இன்று மீண்டும் மறுபதிப்பு செய்வது- இன்றைக்கு விஜய் தொலைக்காட்சியின் ஏறத்தாழ இதே தலைப்பில் அமைந்த- 'நீயா நானா' நிகழ்ச்சி பார்த்த தமிழ்மக்கள் உரசிப்பார்க்கும் வகைக்கு ஆகும்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா? கூட்டு குடும்ப வாழ்க்கையைத் தமிழர்கள் தொலைத்து விட்டனர் என்றெல்லாம் புலம்புகிற கதைக்களங்கள் நிறைய உண்டு. 
ஆனால் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை தமிழர் பண்பாடு அல்லவே அல்ல என்பதே உண்மை. தலைவன் தலைவியைக் கொண்டாடுகிற, தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுகிற பாங்கு தமிழர்களுடையது. கூட்டுக் குடும்பத்தில் இது சாத்தியமே இல்லை. 

தம்மின் தம் மக்கள் அறிவுக்கு பொருந்தாத, முன்னோர்களின் நாடோடி வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களோடான, பொய்யான தொல்கதைகளைப் போற்றிக் கொண்டாடுகிற பிராமணிய இனத்திற்குச் சொந்தமானதுதாம் இந்தக் கூட்டுக்குடும்ப நடைமுறை. 

கூட்டுக் குடும்ப நெறிமுறையைக் கொண்டாடுவது பிராமணியச்சார்பே அன்றி அது தமிழர் அடையாளம் ஆகாது.

தமிழர் முன்னெடுக்கும் திருமணம் ஒரு புதிய குடும்பத்தின் உருவாக்கத்திற்கானதே. திருமணத்திற்கு முந்தைய தலைவன் தலைவியின் காதலைக் களவு என்று கொண்டாடுகிறது தமிழ். திருமணத்திற்கு பிந்தைய தலைவன் தலைவி காதல் கற்பு ஆகும். 
கூட்டுக் குடும்பத்தில் மற்ற உறுப்பினர் அறியாமல் தலைவனும் தலைவியும் எங்ஙனம் காதலில் திளைக்க முடியும். அப்படித் திளைத்தால்தானே கற்பு பேண முடியும். 

யானும் நீயும் யாரோ கியரோ என்று திருமணத்தில் இணைந்த தலைவனும் தலைவியும் கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்து களவுதானே பேண முடியும். அவர்களுக்கு கமுக்கமான தனிமைக்கு எப்படி வாய்ப்பிருக்கும். 

நாடோடி வாழ்க்கை, காமசூத்திரம், கொக்கோகம் எல்லாம் கண்டு, அதையொட்டி வாழ்க்கையை முன்னெடுக்கிற இனத்திற்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை பொருந்தி வரலாம். 

வாழ்க்கைக்குப் பொருள் இலக்கணம் கண்ட தமிழ் இனத்திற்கு தலைவன், தலைவி, மக்கட் செல்வம் என்கிற தனிக்குடித்தனம்தான் பொருத்தமானது. 

அண்மைக்கால சொலவடைகள் கூட அண்ணன் தம்பி என்றாலும் பங்காளி, அக்கா தங்கை என்றாலும் சகக்கிளத்தி என்றே பேசும். 

தமிழில் அண்ணன், அண்ணி என்கிற நெருக்கம் தம்பிக்கு தங்கைக்கு திருமணம் ஆகும் வரைதான். தங்கை திருமணம் ஆகி வேறு வீடு சென்று விடுவாள். தம்பியும் திருமணம் ஆனபிறகு புதுக் குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

தம்பி மனைவியை, தங்கை கணவனை, அண்ணனோ- அண்ணியோ அழைக்க உறவு முறைச்சொல் தமிழில் இல்லை. தமிழில் அவற்றை முன்னெடுக்கத் தேவையும் எழவில்லை. 

பிள்ளைகளின் திருமணத்திற்குப் பிறகும் அப்பா அம்மா இன்றைக்குப் பிள்ளைகளைச் சார்ந்து இருப்பது இன்றைய சமுக சட்டமுறை காரணமே அன்றி தமிழர் குடும்ப அமைப்பு முறைக் காரணம் அன்று. 

அகவை முதிர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்காத, இன்றைய சமூக சட்டமுறையை யொட்டி, தலைவியின் பெற்றோர்களோ, தலைவனின் பெற்றோர்களோ பிள்ளைகளின் வீட்டில் உறுப்பினராக பங்கு பெறலாம். தலைமைப் பொறுப்பிற்கு சண்டையிடுவது பிழையே ஆகும்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமை உடைய, சீரிய மாதிரிச் சமுதாயமான, தமிழ்க் குடும்பம்- தலைவன் தலைவிக்கும், பிள்ளைகளைப் பேணவும், பிள்ளைகளின் படிப்புக்கும். பிள்ளைகளின் தொழில் வணிகம் தனித்திறமைக்கும், பிள்ளைகளின் திருமணத்திற்கும் ஆன அனைத்து செலவுகளுக்கும் பொருள் ஈட்டுவதோடு இன்றைய சட்டசமுகத்திற்கு வரி செலுத்தவும் பணம் ஈட்டுகிறது.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்கள் தொழில் செய்துதான் குடும்பத்தை நிருவகித்து வருகின்றன.
கூட்டுக் குடும்பம் மாதிரியான, பெரிய குடும்பம் ஆன சட்ட சமுகத்தின்- எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். 

மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை நிருவகிக்கும் வாய்ப்பின் காரணமாகத்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசுக்கு சாராயக்கடை நடத்தும் வாய்ப்பும் இருப்பதால் எதற்கும் கையாலாகாதவர்களும் கூட போட்டியில் இணைந்து கொள்கிறார்கள். 

வரிகளைப் பெறுவதற்கான துறைகள் அனைத்தும் மறுஉற்பத்தி சாராத இழப்பு மட்டுமே என்கிற ஒருவழிப் பாதையாகி மக்களின் உழைப்பு ஏராளமாக வீணடிக்கப் படுகிறது. 

உழைக்கும் மக்களுக்கு வரி ஏய்பாளர்கள் என்று பட்டம். தண்டிப்பதற்கு அறங்கூற்றுமன்றங்கள். வரி என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டுவது குற்றமா? உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட மறுப்பது குற்றமா? என்பது தெரியாத மடமையில் சட்ட சமூகம்.

பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிற தமிழ்க்குடும்பம் தம்மையும் காத்துக் கொண்டு தம்மைப் பிணைத்துள்ள அயல்சட்ட சமுகத்திற்கு வரியும்செலுத்திக் கொண்டுதானே பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்க்குடும்பத்தைப் போன்றதான சமுகத்தை கட்டமைக்க விழித்தெழவேண்டிய நிலையில்- 

அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமான இந்தச் சட்ட சமுகம் போன்றதான, கூட்டுக் குடும்பம் என்பதான, வீணடிப்புக்குத் தமிழ்க்குடும்பத்தின் மீது இந்தக் கருத்துப்பரப்புதல் தேவையற்றது என்று நிறைவு செய்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடவுள்! எங்கே, எப்போது, ஏன், உருவாகிறது? இயல்கணக்கில் தமிழியல் தெளிவுபடுத்துவது என்ன

மறுபிறப்பு