இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று பெருமிதம் கொள்கிற ஒரே மொழி, உலகில் தமிழ் மட்டுமே ஆகும். தமிழ்- இறத்தல், காலமாதல் என்கிற சொற்களில் பொருத்தியுள்ள செறிவான பொருளைக் கொண்டாடுவதற்கானது இந்தக் கட்டுரை.
முதல் என தமிழ்முன்னோர் நிறுவியது இடமும், காலமும் ஆகும்.
வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்று நிலைகளை எய்துகிறது தமிழர் முதலென நிறுவியதில் ஒன்றான இடம். இது இரண்டாவதாக சொல்லப்பட உள்ள காலத்திற்கு கடந்தும் உள்ளும் அமைந்த நிலை பற்றி இது கடவுள் எனவும் தமிழ்முன்னோரால் கொண்டாடப்படுகிறது.
தமிழ்முன்னோர் இறுதி என்று நிறுவுகிற பெருவெடியில்- அனைத்தும் ஒன்றித்த பெருங்கோள் வெடித்துச் சிதறியதால் அது மிகமிக நுட்பமான தனி ஒன்றுகளாக சிதைந்து வெளியில் இறைந்து காணப்படுகிறது. இதைத்தான் தமிழ்முன்னோர் முதலென நிறுவியதில் இரண்டாவதாகச் சொல்லியுள்ள காலம் ஆகும்.
இந்த மிக மிக நுட்பமான தனி ஒன்றுகளையே தமிழ்முன்னோர் காலம் என்று குறித்தனர். நமது காலம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு நோக்கினால் தமிழ்முன்னோர் தனிஒன்றுகளைக் காலம் என்று குறித்தது ஏன் என்பதை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
நாம் ஒரு நாளுக்கு, பகல் முப்பது இரவு முப்பது என்று அறுபது நாழிகை என்கிறோம். ஒரு நாழிகைக்கு அறுபது விநாழிகைகள். ஒரு விநாழிகைக்கு அறுபது தற்பரைகள். நமது ஒரு நாள் என்பது என்ன? நாம் வாழும் புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கு எடுத்துக் கொள்கிற காலம் ஆகும். எனவே நமக்கான காலம் நமது புவியாகும். காலம் காட்டுவதால் புவி காலமாகும். தனி ஒன்றுகளும் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிற தான்தோன்றி இயக்கம் உடைய காரணம் பற்றி அதுவும் காலம் காட்டக்கூடியதே. அதன்பொருட்டே அதைக் காலம் என்கின்றனர் தமிழ்முன்னோர்.
தனி ஒன்றுகள் தொடர்ந்து இயங்கும் நிலையில், வேறுவேறு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனி ஒன்றுகள் இணைந்து நிலம், நீர், தீ, காற்று என்கிற கூட்டியக்கத் தொகுப்புகள் உருவாகின. இவைகள் வெளியில் இறைந்து கிடக்கிற காரணம் பற்றி இந்த நான்கையும் இறை என்றனர் தமிழ்முன்னோர். இந்த நான்கும் குவிந்த ஆற்றல்கள் என்கிற நிலையில் இவைகளைத் திரம் என்றும் அழைத்தனர் தமிழ்முன்னோர்.
நிலத் திரத்தில் மற்ற நீர், காற்று, தீ என்கிற மூன்றும் இணைந்து முதலாவதாக மெய்ப்புலன் மட்டும் கொண்ட ஓரறிவு உயிரிகள் தோற்றம் பெற்றன. இவைகளின் இயக்க அடிப்படை பிறத்தல், வளர்தல், இறத்தல் என்று அமைந்தது. ஒவ்வொரு உயிரியின் இயல்பும், இறப்பிற்கான காலக்கெடுவும், அதில் அமைந்த திரங்களின் சேர்க்கையின் எண்ணிக்கை மாற்றம் அடிப்படையில் அமைந்தது.
உயிரிகள் வளர்வதற்கு நீர் தொகுப்பில் இருந்தும், நிலத் தொகுப்;பில் இருந்தும், தீ தொகுப்பில் இருந்தும், நிலத்தில் இருந்தும் வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப இரையாக எடுத்துக் கொண்டன.
இறத்தல் என்பதில் அந்த உயிரி மீண்டும் மண்ணோடு மக்கி நிலத்திற்கும், நீர் தொகுப்பிற்கும், தீ தொகுப்பிற்கும், காற்றுத் தொகுப்பிற்கும் மீண்டன.
இறையிலிருந்து இரையை எடுத்துக் கொண்ட உயிரிகள் காலக்கெடு முடிந்ததும் இறையோடு கலத்தலால் தமிழ்முன்னோர் இதை இறத்தல் என்று பெயரிட்டு அழைத்தனர்.
ஓரறிவு உயிரியின் கூட்டியக்கம் சிதைந்து, அதன் மெய் அடிப்படைகளான- நிலம், நீர், தீ, காற்று என்பன அவைகளின் தொகுப்புகளுக்குச் சென்று விட்டன.
ஆனால் அந்த கூட்டியக்கம் என்கிற உயிர் சுழியம் ஆகி விட்டது. இந்தச் சுழியம் அதன் வரலாறாக அனுபவமாக காலம் ஆகிறது. அந்த அனுபவத்தில் அடுத்த வாய்ப்புலன் குறித்த தேடல் இருந்திருக்க கிளவியாக்கமாக அடுத்து ஈரறிவு உயிரிகள் தோன்றம் பெறுகின்றன. இதே அடிப்படையில் ஆறறிவு மனிதன் வரை கிளவியாக்கம் பெறுகின்றனர்.
இறத்தல், காலமாதல் என்கிற சொற்கள், பொருள்பொதிந்த தமிழ்ச்சொற்கள் ஆகும்.
இறந்து விட்டார், காலமாகி விட்டார் என்று பேசுவது தமிழில் இன்றும் தொடரும் நடவடிக்கை ஆகும். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற அடிப்படையிலேயே தமிழின் ஒவ்வொரு சொல்லும் தமிழ்முன்னோரின் கூட்டுச் சிந்தனையில் ஆய்ந்தாய்ந்து நிறுவப்பட்டுள்ளது.
மனிதனின் காலக்கெடு முடிகிற அடிப்படையை, தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவ முயன்றதன் விளைவே இந்த இறத்தல், காலமாதல் என்கிற சொற்களின் உருவாக்கம்.
தமிழர்தம் பொருள் இலக்கணத்தில் அகத்திணையில் உரிப்பொருளில் கடவுள், இறை, ஆகியன ஆற்றல் மூலமாகவும், அவைகள் தொய்ந்த தெய்வம் வழிபாட்டு மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெய்வம் என்பன- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை நிலத்தில், ஒவ்வொரு நிலத்திற்கும் வேறு வேறு ஆகும். தெய்வம் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் வீட்டுதெய்வம், குலதெய்வம் என்று வேறு வேறு ஆகும்.
அடுத்து இறை என்பது நிலம், நீர், தீ, காற்று என்கிற நாற்திரங்களான ஆற்றல் மூலங்கள் ஆகும்.
கடவுள் என்பது வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடையது ஆகும்.
ஆக இறத்தல் என்பதில் நிலம், நீர், தீ, காற்று என்கிற இறையாகிப் போதல் என்கிற நடப்பு உள்ளடங்கியுள்ளது. இறந்தவரின் உடலை நிலத்தில் புதைக்கும் போது அது மண்ணில் மக்கி நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களில் கலந்து விடுகிறது. ஆக உடல் தன்னுடைய அடிப்படையான நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு திரங்களில் கலந்து விடுகிறது என்கிற அடிப்படை காரணம் பற்றியே அதை இறத்தல் என்றனர் தமிழ் முன்னோர்.
அடுத்து காலமாதலுக்கு வருவோம். இறத்தலைப் போல அவ்வளவு எளிதான பொருள் பொதிப்பு கொண்டது அல்ல காலமாதல்.
தமிழ்முன்னோர் கண்டறிந்த காலமாதல் என்கிற செய்தி உலகினருக்கு புதிய செய்தியாகும்.
உயிரை பேரளவாகக் கொண்டாடும், உயிர் தொடர்பாக மறுபிறப்பு என்கிற செய்தியைக் கொண்டாடும் வகைமையில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடு இல்லை. (மறுபிறப்பை சரி என்று ஒப்புக்கொண்டால் முன்னோர் வழிபாடும் அதில் கிடைக்கும் பலன்களும் சாத்தியமில்லை என்பதை விளக்கி பார்ப்பனியச் சிக்கலுக்கு தமிழ்அடிப்படை விடைஅளி;க்கிறது என்பதை விளக்குகிறது பதின்மூன்றாவது கட்டுரை.)
உயிர் என்பது மீண்டும் உயிர்ப்பது இல்லை, அது சுழியமாகி விடுகிறது, என்பது தமிழியல் ஆகும். மேலும் உயிர் என்பது கூட்டியக்கம் மட்டுமே. அதன் காலக்கெடு முடிந்ததும் அந்தக் கூட்டியக்கம் சுழியம் ஆகிறது. சுழியம் என்பது அந்தக் கூட்டியக்கத்தின் வரலாறும் அறிவும் தெய்வமும் ஆகும்.
உங்களுக்கு வருமானம் எதுவும் வரவில்லை என்பதை சுழியம் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு ஒரு நூறு ரூபாய் வருமானம் வந்து அந்த மாதம், கடந்த ஆனி மாதம் என்று வைத்துக் கொண்டால், அந்த வருமானம் முற்றும் செலவாகி விட்டால் ஆனி மாத சம்பளத்தின் நிலை சுழியம் என்கிற கணக்கீடு ஆகும்.
ஆக ஒரு கூட்டியக்கம் வந்தது. காலக்கெடு முடிவில் சுழியம் ஆக விசும்பில் பதிவாகி விட்டது. அது திரும்ப எண்ணிக்கையாக இயங்க முடியாது. சுழியம் எண்ணிக்கையின் மதிப்பு கூட்ட முடிவது போல தம் எச்சங்களின் அறிவைக் கூட்ட முடியும் கூட்டியக்கச் சுழியங்களால்.
ஆக இந்த உயிரைக் காலமாதல் என்று தமிழர் தெரிவிப்பது எவ்வாறு?
தமிழியலில், முதல் எனப்படுவது இடமும் காலமும் ஆகும். படைப்புக் கோட்பாட்டில் தமிழ்முன்னோருக்கு உடன்பாடு இல்லை.
இடம் என்பது- தான்தோன்றி இயக்கமும் எல்லையும் இல்லாத வெளி ஆகும்.
காலம் என்பது அதில் இயங்கிக் கொண்டிருக்கும், தான்தோன்றி இயக்கம், எல்லை எண்ணிக்கை உடைய மிக மிக நுட்பமான தனிஒன்றுகள் ஆகும். இயங்குவதால் அது காலம் காட்டும் என்பதால் அதை காலம் என்றனர் தமிழ் முன்னோர்.
தமிழ்முன்னோரின் கடைசி என்பது பெருவெடி ஆகும். நமது பயணம் பெருவெடியை நோக்கியது ஆகும். காலத்தின் நோக்கம் பிறத்தல், வளர்தல், இறத்தல் ஆகும். காலத்தின் தனி ஒன்றுகளின் அடுத்த நிலை நிலம், நீர், தீ, காற்று என்கிற எண்ணிக்கை மாற்றத்தால் வேறு வேறு இயல்புகளை கொண்ட இறை அல்லது நாற்திரங்கள் ஆகும்.
மரம், விலங்குகள், மனிதன், நீங்கள், நான் அனைவரும் வெள்வேறு எண்ணிக்கையில், வெள்வேறு இயல்புகள், வேறுவேறு காலக்கெடு அமைந்த கூட்டியக்கங்கள் ஆவோம்.
காலத்தின் நிலை தனி ஒன்றுகள் என்கிற எண்ணிக்கையின் அடிப்படை நிலை ஆகும். சுழியமும் ஒரு எண்ணிக்கை என்கிற நிலையில் கூட்டியக்கம் அல்லது உயிர் சுழியம் ஆதலை காலமாதல் என்றனர் தமிழ் முன்னோர்.
அடுத்து வருகிற கட்டுரை கடவுளையும் இறையையும் தமிழ்மக்கள் தெய்வமாக கொண்டாடுகிற மரபு குறித்த 'நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு! நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு' என்கிற தலைப்பில் அமைந்த கட்டுரையாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக